இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார்.
இந்தக் கொடிய தொற்றிலிருந்து மக்களைக் காக்க போராடும் மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் வீர வணக்கம் செலுத்திய பின் பேசிய அவர், கரோனாவிற்கு எதிரான போரில் மக்களுக்குச் சேவை செய்பவர்கள் அனைவரும் கதாநாயகர்கள் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் விதிக்க நேரிட்டுள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கவலை தனக்குப் புரிகிறது என்றும், இதற்குக் குறிப்பாக நடுத்தர ஏழை மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சமூக தனிமைப்படுத்துதலைத் தவிர வேறு வழிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சிலர் ஊரடங்கு உத்தரவினையும் மீறி வெளியில் சென்றுவதற்கு கவலை தெரிவித்தார். அவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். அவர்கள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு வீரர்கள் வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் போராடிவருவதாகவும் குறிப்பிட்ட அவர், பல மருத்துவர்களின் சேவைகளைப் பாராட்டினார். 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் செவிலியருக்கான ஆண்டாக அமைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் சொன்னார்.
இந்த வைரஸ் மனித குலத்திற்கு சவலான ஒன்று எனவும், இதனை முற்றிலும் ஒழிக்கும் நம்பிக்கை தனக்குள்ளதாகவும் கூறிய அவர், மக்கள் யாரும் இது குறித்து பயப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:'நாட்டு மக்களுக்கு பிகார் பெண்கள் உந்துசக்தியாக உள்ளனர்' - பிரதமர் மோடி புகழாரம்!