கலிஃபோர்னியாவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசம் கூறும்போது, ''கலிஃபோர்னியாவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் இறங்கி உள்ளனர். காட்டுத் தீயை கூடிய விரைவில் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி உள்ளனர் என்று அம்மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சோனா நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 30,000க்கும் அதிகமான நிலங்களில் தாவரங்கள் எரிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர். மேலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் தீக்கிரையாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகாராஷ்டிராவில் உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையம்!