பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக, அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது செல்போன் உரையாடல் மூலம் அம்பலமானது.
இதையடுத்து அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போதைப் பொருள் வழக்கு விசாரணையில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், சிமோன் கம்பாட்டா ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. மேலும், ரியா தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், ”ரியா சக்ரவர்த்தி சிக்கியுள்ள போதைப்பொருள் வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், ஊடகங்கள் எனது பெயரை அந்த வழக்குடன் வேண்டுமென்றே இணைக்கிறார்கள். இது எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே எனது பெயரை இவ்வழக்கில் இணைப்பதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்துவதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (செப்.17) இவ்வழக்கு நீதிபதி நவின் சாவ்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரர் புகார் தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி, இந்தியப் பத்திரிகை கவுன்சிலுக்கு சம்மன் அனுப்பப்படும். மனுதாரரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அக்டோபர் 15ஆம் தேதியில் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட விசாரணைக்கு முன்பு ஒரு முடிவை அலுவலர்கள் எடுக்க வேண்டும்” என நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.