ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசாங்கம் திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.
மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தடுக்கப்பட்டு வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தது. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பழைய நகரத்தின் சில பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது கடந்த ஆறு மாதங்களாக தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, வாயில்லாத ஜீவன்களான விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
முக்கிய பாலங்கள் மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவ்வப்போது பிரிவினைவாதிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர்.
தொடரும் தடை.! நீடிக்கும் சோகம்..! சோகத்தில் பள்ளத்தாக்கு மக்கள்...! இதனால் போக்குவரத்து விதிகள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள்தான் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இவ்வாறான விதிகள் சட்டம், ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இந்த கடின சூழ்நிலையை அரசு நிர்வாகம் உணர வேண்டும்.
இதையும் படிங்க:பனியால் மூடிய சாலைகள்: பிரசவத்திற்காக பெண்ணை தோளில் சுமந்து சென்ற பாதுகாப்பு படையினர்