இந்தியா உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்றாகும். கரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக அண்டை நாடுகள் இந்தியாவை ஏற்கனவே அணுகியுள்ளன.
சமீபத்தில் பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரீஷியஸ், செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் மானிய உதவியின்கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அண்டை நாடான இலங்கைக்குத் தடுப்பூசி மைத்ரி என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று (ஜன. 28) ஐந்து லட்சம் அனுப்பிவைக்கப்பட்டன.
இதனைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, காலத்திற்கு ஏற்ற இவ்வுதவிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்குத் தாராள உள்ளத்தோடு உதவும் இந்திய குடிமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜபக்ச பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஐந்து லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டோம். நன்றி! இக்கட்டான சூழலில் தாராள உள்ளத்துடன் உதவிய மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடிமக்களுக்கும் நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!