கரோனாவுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலக ஆராய்சியாளர்கள் முயன்று கொண்டிருந்தபோது, ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை அறிவித்தது. இருப்பினும், அப்போது மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனைகள் நடத்தப்படாததால் பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின.
அதன் பின்னர் வெளியான முதல்கட்ட மருத்துவச் சோதனை முடிவுகள் ஸ்புட்னிக் வி மீது சற்று நம்பகத்தன்மையை அதிகரித்தது. அதன்படி பிரிக்ஸ் நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை இழந்துவருவதால், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து உறுப்பு நாடுகளின் ஒற்றுமைக்கு ஒரு பொதுவான நோக்கத்தை வழங்குவதாக இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இணை பேராசிரியர் ஜி வெங்கட் ராமன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல்கள் பிரிக்ஸ் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்தச் சூழலில் கரோனா தடுப்பு மருந்து பிரிக்ஸுக்குத் தேவையான உந்துசக்தியை வழங்கும்” என்றார்.
முன்னதாக, கரோனா காரணமாகவும் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருந்த பிரிக்ஸ் மாநாடு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த மாநாடு, வரும் காலங்களில் பிரிக்ஸ் நாடுகள் கரோனா தடுப்பு மருந்திற்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டியது.