இந்தியா-சீனா எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நிலவிவரும் நிலையில், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று சீனாவுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி:
கல்வான் பள்ளத்தாக்கில் நம் நாட்டைப் பாதுகாக்க தங்களது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். ஒரு ராணுவ வீரரைக் காட்டிலும், தன்னலமற்ற மற்றும் தைரியமானவர் இங்கு எவரும் அல்ல. அவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு, எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரோஹித் சர்மா:
நமது நாட்டின் எல்லையை பாதுகாப்பதற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த உண்மையான ஹீரோக்களுக்கு, எனது வீரவணக்கம். அவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு, கடவுள் மன உறுதியை அளிக்கட்டும்.