மும்பை: ஸ்பைஸ்ஜெட் தனது முதல் ஏர்பஸ் ஏ 340 ரக சரக்கு விமானத்தை, சரக்கு போக்குவரத்தில் இணைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல் பரந்த உடலமைப்பு கொண்ட இந்த விமானத்தை முதன்மையாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நீண்ட தூர வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்த புதிய விமானம் இணைக்கப்படவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட்நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்நிறுவனம் சரக்கு போக்குவரத்திற்காக, ஐந்து போயிங் 737 விமானங்கள், மூன்று பாம்பார்டியர் கியூ -400 ரக விமானங்கள், தற்போது இணைக்கப்படவுள்ள ஒரு ஏர்பஸ் ஏ 340 ஆகியவற்றைக் கொண்டு, மொத்தம் ஒன்பது சரக்கு விமானங்களை சேவைக்கு பயன்படுத்திவருகிறது.
இந்த புதிய இணைப்பின் மூலம் சரக்கு போக்குவரத்தில் புதிய எல்லைகளை ஸ்பைஸ்ஜெட்நிறுவனம் தொடும் என்று அதன் தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார். நிறுவன தகவலின்படி, 2020 மார்ச் 25 முதல் 31ஆயிரம் டன் சரக்குகளை பல்வேறு நாடுகளுக்கு 5600 விமான இயக்கங்கள் மூலம் கொண்டு சென்றுள்ளது.
அல்மாட்டி, அபுதாபி, பாக்தாத், பஹ்ரைன், பாங்காக், கம்போடியா, கெய்ரோ, செபு, கொழும்பு, டாக்கா, தோஹா, துபாய், குவாங்சோ, ஹோ சி மின், ஹாங்காங், கோலாலம்பூர், குவைத் உள்ளிட்ட 41 சர்வதேச இடங்களுக்கு மேல் ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்தின் சரக்கு போக்குவரத்து சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
ரஸ் அல்-கைமா விமான நிலையத்தை, நிறுவனம் தனது சரக்கு நடவடிக்கைகளுக்கான மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.