கோவிட்-19 தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன.
மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மிக முக்கிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போதைய கோலாலம்பூர் விமானத்தைச் சேர்த்து, 15-க்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அத்தியாவசிய, மருத்துவப் பொருள்களை எடுத்துச்செல்கிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் 635 விமான பயணங்கள் மூலம் 4,650 டன் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் சென்றுள்ளோம். அந்த 635 பயணங்களில் 228 பயணங்கள் சர்வதேச பயணங்களாகும்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திடம் 116 பயணிகள் விமானங்கள், ஐந்து சரக்கு விமானங்கள் என மொத்தம் 121 விமானங்கள் உள்ளன.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!