யூனியன் பிரதேசங்களே மாநில அந்தஸ்து தருமாறு கோரிவரும் நிலையில், ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தும் மாநிலமாக இருந்த அதனை, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருக்கும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சிறப்பு அந்தஸ்து குறித்து சற்று விரிவாகக் காண்போம்...
மாநில சுயாட்சி:
மத்தியில் ஆளும் அரசானது அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்து முன்னேற வைக்க வேண்டும். இம்மாதிரியான ‘கூட்டாட்சி’ முறையைத் தான் இந்திய அரசியலமைப்பும் வலியுறுத்துகிறது. ஆனால், ஆளும் அரசு அதிகாரங்கள் அனைத்தையும் தன் கையிலே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சமீபத்திய உதாரணமாக, அணைகளின் மீதான மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பிடுங்கி ’அணை பாதுகாப்பு மசோதா’-வை நிறைவேற்றி தன்வசமாக்கியுள்ளது. தற்போது ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது.
இந்த அராஜகப் போக்கை மத்தியில் ஆளும் அரசு இப்போது மட்டும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய சுதந்திரம் வாங்கிய காலகட்டங்களிலிருந்தே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் இந்தப் போக்கை பின்பற்றியது. 1976ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனுடைய விளைவின் ஒரு பகுதியாக ’நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு எழை மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைத்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்னரே அண்ணா மாநில சுயாட்சி கோரிக்கையை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியே வந்தார். ஆனால், இந்த கோரிக்கையை பல்வேறு மாநிலங்கள் தற்போது தான் எழுப்பத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் மத்திய பாஜக அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது. இது மாநில சுயாட்சி கோரிக்கையை எழுப்பிய பல்வேறு மாநிலங்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு அந்தஸ்த்தின் அவசியம்:
இந்தியா என்பது ஒரே கலாச்சாரம் ஒரே நிலப்பரப்பில் வாழும் மக்களை உள்ளடக்கிய தேசம் இல்லை. பல்வேறு வகையான கலாச்சாரங்களையும் மொழிகளையும் நிலப்பரப்புத் தன்மையையும் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா. இவ்வாறு பல்வேறு விதமான நிலப்பரப்புகள் இருப்பதால் தான் அந்ததந்த மாநிலங்களுக்கென்று தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் தான் அந்த மாநிலத்தில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன.
சிறப்பு அந்தஸ்து என்றால் மிகவும் பெருமைக்குரிய நிலை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், கீழே கிடக்கும் ஒரு மாநிலத்தை உயர்த்தும் நோக்கில் தான் இந்த முறை கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பொருளாதார தன்னிறைவை அடையவில்லை. மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள், பழங்குடியின மக்கள் ஆகியோர் தற்போதும் அடிப்படை கல்வியறிவைக் கூடப் பெற முடியாத சூழலில் தான் உள்ளனர். இம்மக்களை உள்ளடக்கிய பின்தங்கிய மாநிலங்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாநிலங்களுக்கும் கட்டாயம் சிறப்பு அந்தஸ்து கொடுத்து அம்மாநிலங்களை முன்னேற வைக்கும் கட்டாயக் கடமை மத்தியில் ஆளும் ’கூட்டாட்சி’ அரசுக்கு உள்ளது.
சிறப்பு அந்தஸ்து தோன்றிய வரலாறு:
சிறப்பு அந்தஸ்து முறை 1969ஆம் ஆண்டில் ஐந்தாவது நிதிக்குழு ஆணையம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. இக்குழு பின்தங்கிய மாநிலங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இந்த நிதிக்குழுவே பிற்காலத்தில் திட்டக்குழு எனப் பெயர் மாற்றப்பட்டது.
சிறப்பு அந்தஸ்துக்கான காரணங்கள்:
- ஒரு மாநிலம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருக்க வேண்டும்.
- குறைந்த அளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்க வேண்டும்.
- மாநிலத்தில் வாழும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
- சர்வதேச நாடுகளின் எல்லைகளில் உள்ள மாநிலமாக இருக்க வேண்டும்.
- பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் வசதிகளில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும்.
- உற்பத்தி தொழில்களை மேற்கொள்ள முடியாத மலைப்பிரதேசமாக இருக்க வேண்டும்.
- எளிதில் பயணிக்க இயலாத நிலப்பரப்பாக இருக்க வேண்டும்.
- தனிநபர் வருமானம் குறைந்த அளவு இருக்க வேண்டும்.
சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
- தொழில்துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சுங்கவரி, கலால் வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- இம்மாநிலங்களுக்கு மத்திய அரசு 90% நிதியை மானியமாகவும் 10% கடனாகவும் அளிக்கும்.
- மத்திய அரசு பட்ஜெட்டின் 30% நிதி சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்குச் செல்லும்.
- வளர்ச்சி திட்டங்களுக்கான மத்திய நிதியளிப்பில் இம்மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- இந்த மாநிலங்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி செலவளிக்காமலிருந்தால், அந்த நிதி அடுத்த நிதியாண்டோடு சேர்த்துக் கொள்ளப்படும்.
சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற மாநிலங்கள்:
சிறப்பு அந்தஸ்து முறையை ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெற்றுள்ளதாக பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜம்மு தவிர்த்து 10 மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் அஸ்ஸாம், நாகாலாந்து, ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தைத் திட்டக் குழு வழங்கியது. இந்த மூன்று மாநிலங்களும் சமூக, பொருளாதாரம் மற்றும் நிலப்பரப்பில் மிகவும் பின்தங்கியதாக இருந்ததால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதன்பின், 1974-1979ஆம் ஆண்டுகளுக்குள் ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அருணாச்சலபிரதேசம், மிசோரம் ஆகியவற்றிற்கும் 2001ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதில் ஜம்மு - காஷ்மீர் மட்டும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ல் உள்ளது. மற்ற 10 மாநிலங்கள் சட்டப்பிரிவு 371ல் உள்ளன.