புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திப் பெற்ற சனீஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறும்.
இதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகைதந்து, சுவாமியை வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி அதிகாலை 5.22 மணியளவில் சனீஸ்வரன் பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியடைகிறார்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் சன்னதியில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
கரோனா காலத்தில் மக்கள் கோயிலில் அதிகம் கூடுவது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தலைமையில் கோயில் நிர்வாகத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பக்தர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாதவண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், பாதுகாப்பாக நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.