2006ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் பிரக்யா சிங். தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிறைக்கைதியாக இருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் பிரக்யாவை எவ்வாறு பாஜக வேட்பாளராக அறிவிக்கலாம் என நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் போட்டியிடத் தடையில்லை - Lok Sabha election
ஜாமீனில் வெளியே வந்திருக்கும் பிரக்யா சிங் மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடத் தடையில்லை என மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பில் தன் மகனை இழந்த நிசார் சையத் என்பவர் மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் சிறைக்கைதி பிரக்யா போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நிசார் சையத்தின் வழக்கை தள்ளுபடி செய்து, பிரக்யா போபால் தொகுதியில் போட்டியிடத் தடை இல்லை என தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரக்யா போட்டியிடுவதைத் தடுக்க சட்டப்பூர்வமான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்திருக்கும் பிரக்யா, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு நீதிமன்றத்தை அவமதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.