இந்தியாவின் பருவநிலை, கார்காலத்தை நிறைவுசெய்து கோடைக்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க மனிதர்களே சற்று தடுமாறுகின்றனர். இந்நிலையில், கோடைக்காலம் விலங்குகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இந்தச் சிக்கலை மாற்ற முயன்றுள்ளது, கேரள அரசு. கேரள மாவட்டம் திருவனந்தபுரத்தில், 36 ஏக்கர் பரப்பளவில் வன விலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நூற்று இருபதுக்கும் மேற்பட்ட பறவையினங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
இதையடுத்து, சுட்டெரிக்கத் தொடங்கும் வெயிலிலிருந்து வன உயிரினங்களைக் காக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. நிலவும் வெப்ப நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட வசதிகளையும் உணவுப் பொருள்களையும் உயிரியல் பூங்கா அலுவலர்கள் பொருள் குறிப்பாகப் பட்டியலிட்டுள்ளனர்.
அனல்காற்றைத் தாங்கமுடியாமல் தவிக்கும் உயிரிகளுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இங்கு காணலாம். இதுகுறித்து பூங்காவின் மூத்த அதிகாரி டி.வி. அனில் குமார் கூறுகையில், ”மழை போல தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பல குழாய்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் விலங்குகளின் உடல் வெப்பநிலை சீரான நிலையில் பார்த்துக் கொள்ளப்படும். நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ள வழக்கமான உணவு வகைகள் வழங்கப்படும்.