கரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதால், மத்திய தெற்கு ரயில்வே மண்டல மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
”ரயில் பாட்” (RAIL-BOT) என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோவை, ஐதராபாத் மத்திய தெற்கு ரயில்வேயின் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஹேம் சிங் பனோத் அவரது குழுவினருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் உள்ள கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை இந்த ரோபோ செய்யும். அவர்களின் உடல்நலனை கண்காணிக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள், பிற உதவி மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்.
செல்போன் மூலமும், ரேடியோ அதிர்வெண் ரிமோட் கொண்டும் இந்த ரோபோவை இயக்க முடியும். உடல் வெப்பநிலையை அளவிட்டு உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றம் என்றால் அலாரம் மூலம் எச்சரிக்கை எழுப்பும் வகையில், இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல்கள் பரிமாற்றத்திற்காக ஆடியோ, வீடியோ வசதி ரோபோட்டில் பொறுத்தப்பட்டுள்ளது. இருளில் கூட தகவல் தொடர்புக்கு ஏதுவாக செயல்படும் தன்மை கொண்டது இந்த வகை ரோபோ. ஒரு கி.மீ வேகத்தில் நகரும் இந்த ரோபோ, கிட்டதட்ட 80 கிலோ எடையைக் கொண்டது.
நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்வதால் சுகாதாரப் பணியாளர்களுக்கும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று பரவுவது இந்த ரோபோ உதவியால் தடுக்கப்படும் என மத்திய தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா: ஊரடங்குக்கு கைக்கொடுக்கும் மினி ரோபோ!