உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. இந்தியாவில் அதன் பரவல் மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 தாக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் -19 பரவலைத் தடுக்கவும், அதே நேரத்தில் மக்களிடையே நிலவும் தேக்க நிலையைப் போக்கவும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயின் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதற்கும், நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வணிக நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தளர்வுகளை அறிவிக்கிறது.
அலுவலகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் மத வழிப்பாட்டு தலங்களை மீண்டும் திறப்பதற்கான 'நிலையான இயக்க நடைமுறை'களை மே 31 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அவற்றின்படி, ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
மேலும் சில பகுதிகளில் அடுத்த கட்ட தளர்வு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல்.8) முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் அதே வேளையில் கோவிட்-19 பரவலைத் தடுக்க பரிமாற்றச் சங்கிலியைக் கட்டுப்படுத்த பொருத்தமான விதிமுறைகளையும், ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.