கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மும்பையில் வேலைசெய்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வருகின்றனர். இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.
இதுகுறித்து சோனுசூட் கூறுகையில், ”துன்பத்தைச் சுகிக்கும் மக்களை பார்ப்பதை என்னால் வார்த்தைகளில் கூறமுடியவில்லை. நிறைய சட்ட சிக்கலுக்கு பின் மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தாயிற்று. தண்ணீருக்காகவும், உணவுக்காகவும், குடும்பத்திற்காகவும் பல மைல்கள் நடந்தவர்களின் வேதனையான பதிவுகளை நான் படித்தது என்னை மிகவும் அலைக்கழித்தது. இடம்பெயரும் தொழிலாளிகள் குறித்த காணொலிகளில், அவர்களின் வேதனையை காண முடிந்தது.
பல கி.மீ நடந்து செல்லும் குழந்தைகளின் கால்கள் நடுங்குகிறது, பாதம் வெடித்து ரத்தம்கூட வழிகிறது. இதையெல்லாம் கண்ட பிறகு என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த நாட்டின் குடிமகனாக என்னுடைய சிறிய பங்கை அவர்களுக்கு செலுத்த நினைத்தேன். அதனால் முயற்சி செய்து அரசிடம் அனுமதி பெற்றேன். தற்போது சொந்த ஊருக்கு பாதுகாப்பாக செல்லும் குடிபெயர்ந்த தொழிலார்களை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.