நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் முடங்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார். இது கண்துடைப்பு அறிவிப்பு என்றும் இதனால் தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்காது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் அவலங்கள் குறித்தும், பல்வேறு மாநிலங்களில் திருத்தப்பட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.