மக்களவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்து ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்குக் காரணம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு போக்காகும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ‘தமிழ் வாழ்க’ என்பது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
கேரளாவில் ஏழாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் நாளன்று இந்தியில் பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்டார். இதற்கு பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மேசையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
பதவிப் பிரமாணம் முடித்து இருக்கைக்கு திரும்பிய கொடிகுன்னில் சுரேஷை சோனியா காந்தி கடிந்துகொண்டிருக்கிறார். கேரள மண்ணில் இருந்து வந்த நீங்கள் மலையாளத்தில் பதவிப் பிரமாணம் எடுத்திருக்கலாமே, இந்தி மொழியில் ஏன் பதவிப் பிரமாணம் செய்தீர்கள் என டோஸ் விட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கேரள எம்.பி.க்கள் யாரும் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுக்கக் கூடாது என்பது சோனியாவின் கட்டளையாம்!