புதுச்சேரி: ஆதிதிராவிடர் உயர்மட்டக் கூட்டத்தைப் புறக்கணித்த அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யுங்கள் என, சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீபாய்ந்தான், விஜயவேனி, சந்திர பிரியங்கா, அரசு சாரா உயர்மட்டக் குழு பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தொடங்கிய உடன் சமூக அமைப்பின் பிரதிநிதி தங்க கலைமாறன் எழுந்து பேசினார். நாலரை ஆண்டுகள் பின் இந்த கூட்டத்தை கூட்டி உள்ளீர்கள். அடுத்த தேர்தல் வருகிறது. அதன் பின் இக்கூட்டம் எப்போது கூடும் என தெரியாது. எனவே குழுவில் யார் உள்ளார்கள் என தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை மற்றவர்கள் சிலரும் ஆதரித்துப் பேசினர்.