இயற்கையில் மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் தத்துவவாதி அரிஸ்டாட்டில். எனவே தனிமைப்படுத்துதல் என்பது நம் இயற்கை விதிக்கு எதிரானது. கோவிட்-19 தொற்று விரைவாகப் பரவிவரும் இந்தச் சூழலில் தனிமைப்படுத்துதலை நமது வாழ்விடம், வருமானம் உள்ளிட்ட காரணிகள் சவாலானதாக மாற்றுகிறது.
எனினும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்துதலும், கைகளைச் சுத்தமாக கழுவுதலுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக உள்ளன. அதிலும் தனிமைப்படுத்துதல் மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வரலாற்றுத் தரவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (காய்ச்சல்) தீவிரமாக இருந்தபோது தனிமைப்படுத்துதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. இதையே கோவிட்-19 தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு நாடுகளும் பரிந்துரைக்கின்றன.
தனிமைப்படுத்துதல் என்றால் என்ன?
தனிமைப்படுத்துதல் என்பது உடல்ரீதியாக சக மனிதனை விட்டு விலகியிருப்பது. சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல் (social distance) என்பது சமூக தொடர்புகளை முறித்துக் கொள்ளுதல் அல்லது சமூக அந்தஸ்து பார்த்து ஒடுக்குதல் எனும் அர்த்தத்தைக் குறிப்பிடும் தவறான சொல்லாக பார்க்கப்படுகிறது. இதனால் உலக சுகாதார மையம் இதனை உடல்ரீதியாக விலகியிருத்தல் (physical distancing) எனும் சொல்லால் குறிப்பிடுகிறது. எனினும் தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தையே பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
தனிமைப்படுத்துதல் எப்படி பின்பற்றப்படுகிறது?
மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பெருந்தொற்று காலங்களில் தனிமைப்படுத்துதல் பின்பற்றப்படுகிறது. மக்களை வீட்டில் இருக்க வேண்டும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், உடல்ரீதியாக சக மனிதனிடமிருந்து 3 முதல் 6 அடி விலகி இருக்க வேண்டும் என்பது தனிமைப்படுத்துதலின் முக்கிய அம்சங்கள் ஆகும். பெரும்பான்மையான அரசுகள் இதன் காரணமாக போக்குவரத்து, பொது இடங்களில் கூடுவதற்காக தடை விதிக்கும். அதேபோல் மக்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் தனிமைப்படுத்துதலை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலை அமைத்துத் தரும்.
தனிமைப்படுத்துதல் எவ்வாறு உதவுகிறது?
எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கிறது. கோவிட்-19 தொற்று வளர்ச்சி அடையும் வேகத்தைக் குறைக்கிறது. இந்தியா தற்போது கோவிட்-19 வளர்ச்சி நிலையின் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்தச் சூழலில் நாம் பாதிப்பைக் கண்டறிய முடியும். ஆனால் மூன்றாம் நிலையை அடைந்துவிட்டால், தனிமைப்படுத்திக் கொண்டாலும் கோவிட்-19 வளர்ச்சியைக் கண்டறிவது கடினம். அது அதிகமானவர்களுக்கு பரவியிருக்கும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்துவிடும்.
தனிமைப்படுத்துதல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதன்மூலம் சுகாதார மையங்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைகிறது. இது சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்துப் போராட பெரும் உதவியாக இருக்கும்.