இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாஜக அரசுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என, அவர்களின் தகவல்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அவர்களது சொந்த தகவல்களை இஸ்ரேலைச் சேர்ந்த ஹேக்கர்கள், ஹேக் (இணையத்தை முடக்கி) செய்து திருடியுள்ளனர்.
இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இவ்விவகாரத்தில் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் வாட்ஸ்அப் கணக்குகள் வேவு பார்ககப்பட்டுள்ளது அபாயகரமானது. வெட்கக்கேடானதும் கூட.
இதனைத் திருடிய இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து மோடி அரசாங்கம் அந்த தகவல்களை வாங்கியுள்ளது. தகவல்கள் பரிமாற்ற தளத்தில் நடந்துள்ள இந்த விதிமீறலுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்தும் உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.