கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், எப்படி 'மோடி' என முடியும் பெயரை கொண்ட அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்.
நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எவ்வாறு மோடி என்னும் பொதுப்பெயரை கொண்டுள்ளனர் என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ராகுலின் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி, பிற்படுத்தப்பட்ட மக்களான மோடி இனத்தை தவறாக கூறிய ராகுல்காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலில் மோடி இனம் இருக்கிறது. ஒரு சமூகத்தை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் பேசியிருக்கிறது. ராகுல்காந்தி மக்கள் மீது மதிப்பு வைத்திருந்தால், நாட்டிலுள்ள அனைவரிடமும், அமேதி தொகுதியின் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார்.
முன்னதாக பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, ராகுல்காந்தி தமது இனமக்கள் குறித்து தவறாக பேசியுள்ளார் எனக் கூறி அவருக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.