அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை இந்தியா இன்று வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. நவீன இந்தியாவுக்கு சிறகு முளைத்து எங்கோ பறந்துகொண்டிருக்கிறது எனக் கூறிவரும் நிலையில், சாதியப் பாகுபாடுகளும், பட்டியலின மக்களை ஒதுக்கி வைப்பதும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ளது கோபாபூர் கிராமம். அந்த கிராமத்தில் திங்கள் கிழமையன்று, 6 பட்டியலினப் பெண்களை மலம் உண்ண வைத்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சன் கிராமத்தில் மூன்று பேர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்குக் காராணம் தெரியாத கிராம மக்கள், ஜோசியம் பார்க்கும் ஒருவரிடம் ஏன் என குறி கேட்டதற்கு, கிராமத்திற்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த உயர் சாதி எனத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் மக்கள், ஜோகி தாஸ், நாம் நாகக், ஹரி நாகக், ஜோகேந்திர நாகக், கூரியா நாகக் உள்ளிட்ட 6 பட்டியலினப் பெண்களை ஒரு அறையில் வைத்து கட்டி வைத்து அடித்துள்ளனர். அவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், மனித மலத்தை கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளனர்.