தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்று தனி இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது பெயரைச் சொன்னால், கை, கால்கள் மட்டும் அல்ல அவரது நகம் கூட நடிக்கும் என்று சொல்வார்கள். தமிழ் உச்சரிப்பு, முகபாவனை கண்களால் மாயவித்தை காட்டிய மகாநடிகன் செவாலியர் சிவாஜி கணேசன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை! - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செவாலியர் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ரசிகர்களால் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு இன்று 92ஆவது பிறந்தநாள். இதனை சினிமா துறையினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில், புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில சிவாஜி கணேசன் ரசிகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.