அரசு அமல்படுத்திய ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை மோடி அரசு இயக்கியது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.
இருந்தபோதிலும், கடந்த சில நாள்களாக 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள், முடிவெடுக்கப்பட்ட இடத்தை அடையாமல் வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. ஏழை, எளிய மக்களின் உரிமைகளை மறுத்து அவர்கள் வாழ்கையில் விளையாடுகிறது.
கடந்த பத்தாண்டுகளாக ரயில்வேதுறை சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தது. தற்போது, மோடியின் மந்திரத்தால், ரயில்கள் கூட தனது வழியை மறந்துள்ளன. மோடி அரசின் நிர்வாகத் தோல்விக்கு, ஏழைகளுக்கு எதிரான அரசு மனநிலையின் வெளிப்பாடுக்கு இது ஒரு எடுத்துகாட்டு" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வியை சந்தித்துள்ளது. மோடி அவசரமாக எடுத்த முடிவை எப்படி அறிவியல் ரீதியாக முடிவுக்கு கொண்டுவரலாம் எனத் தெரியாமல் முழிக்கிறார். அரசின் இந்த செயல்பாட்டால் ஏற்பட்ட பொருளிழப்பை இந்திய மக்கள்தான் சுமக்கிறார்கள்.
பொதுத் துறையில் அவசர நிலையை மோடி அரசு ஏற்படுத்தியிருக்கிறது. பொது சுகாதாரத்தை மேம்படுத்த ஊரடங்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: சூசகமாக நிராகரித்த இந்தியா!