ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தலைநகராக விளங்கிய ஹைதராபாத், தெலங்கானா வசம் சென்றது. இதையடுத்து கிருஷ்ணா நதிக்கரை அருகே, அமராவதி என்ற இடத்தை தேர்ந்தெடுத்து புதிய தலைநகரை உருவாக்கும் பணிகள் நடந்தன. இந்த திட்டத்தை சந்திரபாபு நாயுடு முன்னெடுத்தார். இந்த பணிகள் நிறைவடையாத நிலையில், தேர்தலில் தோல்வியுற்ற சந்திரபாபு தனது ஆட்சியை இழந்தார்.
தொடர்ந்து ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்ததும் முதல்கட்டமாக அவர், 6.84 சதுர கிலோமீட்டர் தொடக்கப் பகுதியை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இத்திட்டம் குறித்து தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் இத்திட்டத்தை நிறுத்தியதாக அமைச்சர் போட்சா சத்தியநாராயணா தெரிவித்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூர் அமராவதி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் (SAIH) இந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமராவதியின் வளர்ச்சியில் இருந்து விலகிய மூன்றாவது பெரிய நிறுவனம் சிங்கப்பூர் கூட்டமைப்பு ஆகும்.