பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு திடீரென்று நரம்பியல் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பிரிட்டன் மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வந்த மருத்துவப் பரிசோதனைகளும் நிறுத்தப்பட்டன.
இந்தச் சூழலில் நேற்று (செப்.12) இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி பிரிட்டனில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இந்தக் கரோனா தடுப்பு மருந்து சோதனை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து சோதனையை மீண்டும் தொடங்க அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருப்பதாக இந்தியாவில் இந்தத் தடுப்பு மருந்தின் சோதனைகளை மேற்கொண்டுவரும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.