கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், உலகம் முழுவதும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில், போக்குவரத்து என அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், வர்த்தகப் பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ஆகியவை, ஆன்லைனில் மட்டுமே நடந்து வருகின்றன. அதனால், ஆன்லைன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதை சைபர் கிரைம் கிரிமினல்கள் பயன்படுத்தி, நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களை அதிக அளவில் நிகழ்த்துவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக, உலகில் சைபர் கிரைம் தாக்குதல் சம்பவங்கள் மாபெரும் வகையில் அதிகரித்துள்ளன. வளர்ந்து வரும் டிஜிட்டல் சார்பு இணைய நிறுவனங்களுக்கு, இந்தத் தாக்குதல் பாதிப்பை அதிகரித்துள்ளதாகவும் ஒவ்வொரு 39 விநாடிகளிலும் இதுபோன்ற ஒரு சைபர் தாக்குதல் (cyber attack) சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல குடிமக்கள் +92 என்று தொடங்கும் மொபைல் எண்களிலிருந்து வரும் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் அல்லது குறுஞ்செய்திகள் வருவதாகவும்; அதில் விளையாட்டில் உங்களுக்கு சில பரிசுத் தொகை கிடைத்துள்ளது எனத் தெரிவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.