இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் முடிவிலும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1971ஆம் ஆண்டு நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு 543 தொகுதிகள் என பிரிக்கப்பட்டது. இது 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. 1971ஆம் ஆண்டு இந்தியாவில் 55 கோடி மக்கள் தொகை மட்டுமே இருந்தது. தற்போது நாட்டில் மக்கள் தொகை தோராயமாக 130 கோடிக்கும் மேலாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர், நாட்டின் மக்களவை நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் என தெரியவருகிறது. இதில் சாதகமும் பாதகமும் உள்ளது. ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்படுவதால் மக்களவை தொகுதிகளில் வடமாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தென் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. உதாரணமாக, தென்னிந்தியாவில் 130 மக்களவை இடங்கள் மட்டுமே உள்ளன. இதன் விளைவாக, இந்திய அரசியலில் வட இந்தியாவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது.