இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநில நிர்வாகத்துறை சார்பாக அமைச்சர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் சுகாதாரத் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர் துலசி சிலாவத், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கமல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு மாநிலத்தில் முன்னதாக ஆட்சியில் இருந்த கமல்நாத் தலைமையிலான அரசு, கடந்த ஆறு மாதத்தில் எடுத்த முடிவுகள் பற்றி ஆய்வு செய்யவுள்ளது. இது அம்மாநில மக்களிடையே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலுஜா பேசுகையில், ''இதுபோன்ற ஆய்வுகள் நடப்பதை வரவேற்கிறோம். ஆனால் இந்தக் சூழலில் மாநிலத்தில் பரவி வரும் கரோனா வைரஸ் சூழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியினருடன் அரசியல் செய்வதற்கு பின்னர் நேரம் கிடைக்கும்'' என்றார்.
இதற்கு பதிலளித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்னேஷ் அகர்வால் பேசுகையில், ''கரோனா சூழலைக் கட்டுப்படுத்துவதற்காக என்ன மாதிரியான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆய்வு செய்கிறோம். மாநில அரசின் முழு கவனமும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே உள்ளது'' என்றார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 173 பேராக உயர்ந்துள்ள நிலையில், 232 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம்: எட்டு கட்சிகள் எதிர்ப்பு