மும்பை:பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் சிவசேனா கட்சி கூட்டணி வைக்கவில்லை என்றும் 50 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிவசேனா கட்சி வேட்பாளர்கள், டிரம்பெட்(ஊதுகொம்பு) சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் வில்அம்பு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் முன்னதாக அனுமதி மறுத்திருந்தது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் சின்னம் அம்பு என்பதால் குழப்பத்தை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தேர்தல் பரப்புரை குறித்த பேசியுள்ள அனில் தேசாய், உத்தவ் தாக்கரே பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்வார் என்றும் கூடுதல் விவரங்களை கட்சித் தலைமை வெளியிடும் என்றும் கூறியுள்ளார்.