சாவர்க்கர் மீதான பாஜகவின் அன்பை "போலி" என்று விமர்சித்துள்ள சிவசேனா, மகாராஷ்டிரா அரசாங்கத்தை குறிவைப்பதற்குப் பதிலாக மத்திய அரசு இதுவரை சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கரை கௌரவிக்கத் தவறியது ஏன் என்று மாநில பாஜக தலைவர்கள் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. சாவர்க்கர் பிரச்னை மூலமாக சிவசேனாவை ஓரம் கட்டலாம் என்று பாஜக நினைத்தால் அது முற்றிலும் தவறானது என்றும் கூறியுள்ளது. அக்கட்டுரையில் முக்கியமான கருத்துகள் பின்வருமாறு:
மகாராஷ்டிராவில் உள்ள பாஜக தலைவர்கள் சாவர்க்கர் பிரச்னையில் அரசாங்கத்தை குறிவைப்பதாக அறிவித்தனர். இது சாவர்க்கர் மீது பாஜகவுக்கு மரியாதையோ, நம்பிக்கை இருக்கிறது என்றோ பொருள் அல்ல. இதனை பாஜக அரசியல் ஆயுதமாக கையிலெடுத்துள்ளது.
சாவர்க்கர் வெறுமனே ஒரு விவாதப் பொருள் அல்ல. அவரை நாம் பின்பற்ற வேண்டும். சாவர்க்கரின் வாழ்க்கை என்பது தியாகம், கொள்கைகள், போராட்டங்கள் ஆகியவை நிறைந்தது. புதன்கிழமை அனுசரிக்கப்பட்ட சாவர்க்கரின் நினைவுநாள் விழாவில் எல்லோரும் மரியாதை செலுத்தினர். ஆனால், சாவர்க்கரை நினைவில் வைத்திருப்பவர்கள், அவரை உண்மையிலேயே புரிந்து கொண்டார்களா? சாவர்க்கர் பிரச்னையில் மகாராஷ்டிரா அரசாங்கத்தை ஓரம் கட்டுவோம் என்று பாஜக கூறுகிறது. ஆனால் ஓரம் கட்டப்பட்டவர்கள், மற்றவர்களை ஓரம்கட்டுவதை பற்றி பேசக்கூடாது.
ஆனால், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு சாவர்க்கருக்காக பாரத ரத்னாவை வழங்கக்கோரி அனுப்பிய கடிதங்களுக்கு என்ன நடந்தது? கடிதங்களை கூட மத்திய அரசு கவனிக்கவில்லை. இது மகாராஷ்டிராவுக்கும் சாவர்க்கருக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.
குடியரசு தினத்தன்று பாரத ரத்னாவை சாவர்க்கருக்கு மத்திய அரசு ஏன் வழங்கவில்லை? சாவர்க்கரின் புதிய தொண்டர்கள் அதனைப் பற்றி பேசுவார்களா? அவ்வாறு பேச நினைத்தால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வையுங்கள் அந்தமான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, சாவர்க்கர் தனது வாழ்க்கையை ரத்னகிரியில் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்தார்.
மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். தீண்டாமையை ஒழிப்பதற்கும் சுதேசியைப் பரப்புவதற்கும் சாவர்க்கரின் ஒத்துழைப்பைக் கோரினார் காந்தி.