மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவர்கள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர் சிக்கல் நீடித்துவருகிறது.
56 இடங்களை வென்ற சிவசேனா, முதலமைச்சர் பதவியை கேட்டுவருதால், அக்கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள பாஜக ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி குறித்த தங்களின் விருப்பத்தை மக்களவைத் தேர்தலின்போதே பாஜகவிடம் தெரிவித்துவிட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். இதனை மறுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இதுபற்றி தங்களிடம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கிடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்துவந்தது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பாஜகவை விமர்சித்து கட்டுரை வெளிவந்தது. பின்னர், பாஜக மூத்தத் தலைவர் சுதிர், நவம்பர் 7ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்கவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பகீரங்கமாக எச்சிரித்தார். இதற்கு சிவசேனா, குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உள்ளபோது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தினால், அது அரசியலமைப்புக்கு எதிரானது என பதிலடி தந்தது.