அமெரிக்காவின் பானமாவுக்கு சொந்தமான 'தி நியூ டைமண்ட்' என்ற கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக 2.60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டது.
இந்தக் கப்பல் இன்று(செப். 5) ஒடிசாவிலுள்ள பரதீப் துறைமுகத்திற்கு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், நேற்று முன்தினம் இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஏற்பட்டதால், தீ விபத்து குறித்து இலங்கைக் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு விரைந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அக்கப்பலிலிருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்திய அரசு சார்பிலும் தீயை அணைக்க இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டது. முதல்கட்டமாக தி நியூ டைமண்ட் கப்பல் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டத்தில் இருந்து வெளியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.