இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தபோதிலும் வளர்ச்சி அடையாத பின்தங்கிய பகுதியாகவே அது பல காலமாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட டெல்லியை வளர்ச்சியின் பாதைக்கு இட்டு சென்றவர்களில் முக்கியமான நபர் ஷீலா தீட்சித். இவரின் நிர்வாக திறனை கண்டு வியந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாக ஷீலா தீட்சித்தை தேர்ந்தெடுத்தார். 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாக ஷீலா தீட்சித் பொறுப்பு வகித்தார். அதே காலக்கட்டத்தில் கன்னௌஜ் மக்களைவை தொகுதியின் உறுப்பினராகவும் ஷீலா தீட்சித் இருந்தார்.
1986 முதல் 1989 வரை ராஜிவ் காந்தி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராகவும் ஷீலா தீட்சித் பொறுப்பு வகித்தார். டெல்லி காங்கிரஸ் தலைவராக 1998ஆம் ஆண்டு பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாநிலத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை எதிர்கொண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். அதே ஆண்டு டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு மாநிலத்தில் பல திட்டங்களை அறிமுகபடுத்தினார். அவர் அறிமுகபடுத்திய 'பாகிதாரி' திட்டத்தின் மூலம் அரசுடன் சேர்ந்து குடிமக்களே அடிப்படை வசதிக்கு உதவி செய்யலாம்.
சுஷ்மா ஸ்வராஜுடன் ஷீலா தீட்சித் அவரின் ஆட்சிக் காலத்தில்தான் மெட்ரோ திட்டம், பி.ஆர்.டி எனப்படும் Bus Rapid Transit system டெல்லியில் கொண்டுவரப்பட்டது. 2003ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மற்ற மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலையால் காங்கிரஸ் தோற்றபோது டெல்லியில் 2/3 பெரும்பான்மையை பெற்று காங்கிரஸ் கட்சி, ஷீலா தீட்சித் தலைமையில் ஆட்சி அமைத்தது. உலகையே வியக்கும் அளவுக்கு காமன்வெல்த் போட்டிகளை டெல்லியில், ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. 10.33 வளர்ச்சி விழுக்காட்டுடன் உலக நகரங்களின் வரைபடத்தில் டெல்லியை பதிய வைத்தவர் ஷீலா தீட்சித். 2010ஆம் ஆண்டு தாரா சிகோ விருதை ஈரான் - இந்திய சமூகம் இவருக்கு வழங்கி பெருமைபடுத்தியது.
2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ், ஷீலா தீட்சித்தை அறிவித்தது. கேரளா ஆளுநராக சிறிது காலம் ஷீலா தீட்சித் பொறுப்பு வகித்தார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டபோது அவர் சந்தித்து ஆசி பெற்ற ஒரு சில தலைவர்களில் ஷீலா தீட்சித்தும் ஒருவர். கடைசியாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி முகத்துடன் தன் அரசியல் வாழக்கையை ஷீலா தீட்சித் முடித்துக் கொண்டார். பல கட்டங்களில் அரசியலில் இருந்து ஷீலா தீட்சித் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் முதலமைச்சராக, ஆளுநராக, கட்சியின் முக்கியப் பொறுப்பாளராக தன்னை வடிவமைத்துக் கொண்ட ஷீலா தீட்சித்தின் வாழ்வு மரணம் மூலம் முடிவடைந்துள்ளது.