திருவனந்தபுரம் மக்களைவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் அதே தொகுதியில் அமைந்துள்ள கந்தாரி அம்மன் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை காலை வழிபடச் சென்றார்.
அப்போது சசிதரூர் கோவிலில் உள்ள துலாபரத்தில் ஏறி அமர முற்படும்போது, எடை தாங்காமல் துலாபரம் உடைந்தது. இதனால் சசி தரூரின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சசிதரூர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று திருவனந்தபுரம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, சசிதரூர் நேரில் சந்தித்தார். தலையில் காயம் ஏற்பட்ட போதிலும், புத்துணர்ச்சியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சசிதரூர் குறித்து பேசிய ராகுல்காந்தி கூறுகையில்,
"சசிதரூருக்கு காயம் ஏற்பட்டதை அறிந்து கவலையடைந்தேன். அவர் காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் திரும்பி வந்ததது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது அவருடைய புத்துணர்ச்சியை வெளிபடுத்துகிறது. காங்கிரஸ் தலைவராக நான் கூறுகிறேன். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் சசிதரூர் குரல் எழுப்புவார். அவர் கேரளாவுக்கான சொத்து" எனக் கூறினார்.
முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிதரூரை, பாஜகவைச் சேர்ந்தவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.