லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள ஷாஜஹான்பூரில் சட்டக் கல்லூரி ஒன்று உள்ளது. இது பாஜக முன்னாள் எம்.பி., சின்மயானந்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டுவருகிறது.
இதில், படித்துவந்த 24 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது கல்லூரி நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் செயல்பட்டு வரும் சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதுதொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சின்மயானந்தை கைதுசெய்தனர். இந்நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதன்படி, வழக்கு விசாரணைக்காக லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டிய இளம்பெண் நேற்று (அக்.13) ஆஜரானார். சிறப்புநீதிமன்ற நீதிபதி பி.கே.ராய் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.
அப்போது, “சிலர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே சின்மயானந்த் மீது குற்றஞ்சாட்டினேன், அதனைத் தற்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் இளம்பெண் தரப்பில் கூறப்பட்டது. மேலும், வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் இளம்பெண் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண் வேறு காரணங்கள் இல்லை எனக் கூறினார். இதையடுத்து நீதிபதி அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சின்மயானந்தா கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி நீதிமன்ற பிணை கிடைத்தது. அவர் மீதான 13 பக்க குற்ற பத்திரிகையில் 33 சாட்சியங்கள், 29 ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க:சிக்குவாரா சின்மயானந்தா? - வலுக்கும் ஆதாரம்!