கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அவரது வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கிடையே, பல்வேறு மத்திய அமைச்சர்கள் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அர்னாப்பின் கைது அவசர நிலை பிரகடனத்தை நினைவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தை மீண்டும் அவமதித்துள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் தனிமனித சுதந்திரத்திற்கும் நான்காவது தூணான ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிரகடனத்தை நினைவுப்படுத்துகிறது. பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.