மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரோனா பாதிப்பு நிலமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தற்போதைய நிலவரம் குறித்தும் கேட்டறிந்ததாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமித் ஷாவின் செயலர் அஜய் குமார் பாலா தெரிவித்தார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயிகளின் இடம்பெயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உணவு, தங்குமிடத்தை ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதுபோல், வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலங்களில் தங்கிப்படிக்கும் மாணவர்கள், வேலை பார்க்கும் பெண்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கவைக்க ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், என்ஜிஓ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு உணவு, மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்து தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்திய அவர், உணவகங்கள், மாணவர் விடுதிகள் செயல்படுவதை நெறிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:‘கட்சித் தாவல் தடை சட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் பாஜகவின் உத்தி’ - மேத்யூ இடிகுலா