டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. டெல்லி மாட்டியாலாவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அமித் ஷா, "பொய் வாக்குறுதிகள் அளிப்பதற்கென்று ஒரு போட்டி வைத்தால் அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் வெற்றிபெறுவார்.
நாட்டிலேயே தரமற்ற குடிநீர் டெல்லியில்தான் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ஏழை மக்கள் வாக்களித்துவிட கூடாது என்பதற்காகத்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் அமல்படுத்தவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்தான் பாஜக கடைசியாக வென்றது. உலக தரம் வாய்ந்த நகரமாக டெல்லியை மாற்ற மோடிக்கு வாய்ப்பு தாருங்கள்.