டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகன போராட்டங்கள் எல்லை மீறி நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களினால் தற்போது வரை 34 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைக் கட்டுக்குள் கொண்டுவரை டெல்லி அரசுடன் மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு இயங்கிவரும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் பல்வேறு வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணையின்போது, டெல்லி காவல் துறைக்கு ஆதரவாக தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் மனிந்தர் கவுர் ஆச்சாரியா, மூத்த வழக்கறிஞர்கள் அமித் மஹாஜன், ரஜத் நாயர் ஆகிய நான்கு பேர் ஆஜராகுவர் என்று மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்லி கலவரங்களில் சிறுபான்மையினர் மீது மதவாத சக்திகள் தாக்குதல் நடத்தியதில் காவல் துறையினருக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், துஷார் மேத்தா உள்ளிட்டோரை வழக்கறிஞர்களாக நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'டெல்லி கலவரத்தைப் பொறுப்புடன் கையாளுங்கள்' - ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்