பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இந்நிலையில், அக். 4 ஆம் தேதியன்று அவருடைய வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் பாண்டே விசாரணை நடத்தினர். தொடர்ந்து வந்த தடயவியல் வல்லுநர் குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட மாலிக் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருந்துள்ளதாகவும், அதனால் அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இந்த கொலைக்கு பின்னணியில் இருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் விஷால் சர்மா கூறுகையில், "சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நாங்கள் ஒரு நாள்குறிப்பை மீட்டெடுத்துள்ளோம்.
அதில் உள்ள தகவலின்படி, மாலிக் மக்களுக்கு வட்டிக் கடன் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. கடன் வாங்குபவர்களிடம் அவர் வெற்று காசோலைகள் மற்றும் முத்திரை தாள்களில் கையெழுத்து வாங்கி வைத்துகொண்டு பின்னர் அச்சுறுத்தி வந்துள்ளார் என அறியமுடிகிறது.
அதேபோல, கடன் வசூலிப்பதிலும் அவர் கறாராக இருந்துள்ளார். கடனாளிகளிடம் அவர் கடுமையாக நடந்துகொண்டுள்ளார்.