கரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, 90 விழுக்காடு வரை பலனளிக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கரோனா தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் மருத்துவ சோதனையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தனக்கு கடும் நரம்பியல் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் அற்றது, பலனளிக்கக் கூடியது என்பதை உறுதி செய்யும் வரைவில் இந்தத் தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்படமாட்டாது. சென்னையில் தன்னார்வலருக்கு ஏற்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றாலும் அவரது பாதிப்பு தடுப்பு மருந்தால் ஏற்பட்டதில்லை.
தடுப்பு மருந்து குறித்து தவறான தகவல்களைப் பரப்புதாலும் நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கவும் அந்த தன்னார்வலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த அனைத்துத் தரவுகளையும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்தோம். தேவையான அனைத்து செயல்முறைகளும் முடிந்த பின்னரே சோதனைகளைத் தொடர்ந்தோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 90 விழுக்காடு வரை பலன்: இந்தியாவில் தயாராகும் ஆகஸ்போர்டு கரோனா தடுப்பு மருந்து!