கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆசிரியரான இவர் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றுள்ளார். தன்னிடம் அறிமுகமாகும் பெண்களிடம் வனத்துறையில் பணியாற்றுவதாகவும்; தனது பெயர் சுதாகர் ஆச்சாரியா என்று கூறியும் பல பெண்களை மயக்கியுள்ளார்.
அவர்களோடு திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக்கொண்ட பின், கருத்தடை மாத்திரை என்று கூறி சயனைடைக் கொடுத்து கொன்றுள்ளார். சுள்ளியா பகுதியைச் சேர்ந்த சுனந்தா, வம்படபதவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பாரிமார் பகுதியைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 பேரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி கொலை செய்த வழக்குத் தொடர்பான விசாரணை, மங்களூரு 6ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த விசாரணயில் கேரள பெண்ணை சயனைடு கொடுத்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளித்தது. பின்னர் தண்டனை குறித்த விவரங்கள் நவம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.