பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான உஷா வித்யார்த்தி, லோக் ஜனசக்தி கட்சியில் (எல்ஜேபி) இன்று (அக்.07) இணைந்தார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான் முன்னிலையில் உஷா வித்யார்த்தி அக்கட்சியில் இணைந்தார். வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், அவர் பாலிகஞ்ச் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்த பின்னர், லோக் ஜனசக்தி கட்சி பிகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இதுவே சரியான முடிவு. பிகாரை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் சிராகின் பார்வை சிறப்பானது. இக்காரணத்திற்காக இதுபோன்ற சில கடுமையான முடிவுகள் தேவைப்படுகின்றன” என வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
பிகார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கடந்த அக்டோபர் 4ஆம் தேதி லோக் ஜனசக்தி கட்சி பிரிந்த நிலையில், வருகிற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 143 இடங்களில் போட்டியிடுகிறது. இருப்பினும், மத்தியில் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அக்கட்சி அங்கம் வகிக்கிறது.