மகாராஷ்டிராவில் சிவ சேனா-காங்கிரஸ்-தேசிவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை விரிவாக்கப்பட்டது. இதன்மூலம், அமைச்சரவையின் பலம் 46 ஆகக் கூடியுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டுவசதி ஆகிய துறைகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், விவசாயத் துறை சிவ சேனாவுக்கும், ஆற்றல், பொதுப்பணித் துறை காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அமைச்சரவைப் பகிர்வு கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியடையச் செய்துள்ளதாக எழுந்தப் பேச்சைத் தொடர்ந்து, அதுகுறித்து கூட்டணிக் கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.