கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. மூன்று மாதம் நடைபெறவுள்ள இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பத்தாயிரம் காவல் துறையினர் குவிக்கப்படவுள்ளனர். பாதுகாப்புப் பணியானது நவம்பர் 15ஆம் தேதி முதல் ஐந்து கட்டமாக நடைபெறவுள்ளது.
அனைத்து பெண்களும் ஐயப்பன் கோயிலில் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து பல பெண்கள் அங்கு வழிபடச் சென்றனர். ஆனால், சிலர் அதனை தடுத்துநிறுத்த முற்பட்டு பெரும் சர்ச்சை வெடித்தது. சட்டத்தை இயற்றி பெண்களை கோயிலில் அனுமதிப்பது சாத்தியமற்றது, அது தங்களால் இயலவில்லை என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.