குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகத் தலைநகர் டெல்லி கடும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் இரு மாதங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான மக்கள் அறவழியில் போராடிவருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு எதிராக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் போராட்டக்காரர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் எனப் பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இந்து சேனா என்ற அமைப்பினர், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுக்கு எதிரான பெரும் போராட்டம் நடத்துவோம் என அறைகூவல் விடுத்த நிலையில், அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து இந்தச் சிக்கலை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கையில் டெல்லி காவல் துறை களம்கண்டுள்ளது.
ஷாஹீன் பாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறை பதற்றத்திற்குரிய பகுதியான ஷாஹீன் பாக்கில் 144 தடை உத்தரவை பிறப்பித்த டெல்லி காவல் துறை அங்கு, கும்பலாகக் கூடவோ, போராட்டம் நடத்தவோ தடைவித்துள்ளது. இந்தத் தடையை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராகுல் தமிழ்நாடு வருவாரா? - தேதி கிடைக்காமல் தவிக்கும் காங்கிரஸ்!