இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில், ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளன்று பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. தொடர்ந்து, நட்சத்திர விடுதிகள், தேவாலாயங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரே சமயத்தில் குண்டு வெடித்தது.
இதில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
உலகம் முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியக் கடலோரப் பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் காவல் துறையினர் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா உத்தரவின்பேரில், வடக்கு காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான காவல் துறையினர் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், மிஷின் வீதியிலுள்ள ஜென்மராக்கினி தேவாலயம் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில் பாதுகாப்புப் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுவருகின்றனர்.
புதுச்சேரி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு