அடுத்த ஏப்ரல் முதல் ஊரகப் பகுதிகளில் "தூய்மை இந்தியா"- வின் இரண்டாம் கட்ட திட்டத்தினை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்காக தோராயமாக ரூ.52,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தூய்மை மெகா திட்டத்தின் முதலாம் ஆண்டின் இரண்டாம் கட்டத்திற்கு சுமார் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டதென்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டாம் கட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலை முழுமையாக அகற்றுவது என்பது இலக்காகும். சமீபத்தில், பல்வேறு மாநிலங்களில் துப்புரவு சேவைகளின் தரத்தை ஆய்வு செய்யும் ஊரக வளர்ச்சி குறித்த நிலைக்குழு ஒரு சில கசப்பான உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. உ.பி, பீகார், மத்தியப் பிரதேச அரசுகள், "தூய்மை இந்தியா" கணக்கின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இரண்டரை ஆண்டுகளில், ரூ.6,500 கோடி செலவிடப்படாத நிலுவைத்தொகைகளைக் குவித்துள்ளன என்பது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், அசாம் மாநிலங்கள் சேர்க்கப்பட்டால், செலவு செய்யப்படாத நிலுவைகள் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். அற்பணிப்பும், பொறுப்புணர்வுமற்ற பல ஏஜென்சிகளிடம் பொறுப்பினை ஒப்படைத்ததே தூய்மை இந்தியா திட்டத்தின் முதல்கட்ட தோல்விக்கு முக்கிய காரணம் என்பதை நிலைக்குழுவின் கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒரு சரியான செயல்திட்டம் போடப்பட்டிருந்தால், செலவழிக்கப்பட்ட பணத்திற்கேற்ப சரியான பலன்கள் பெறப்பட்டிருக்கும். குறைந்தபட்சம், இயக்கத்தின் இரண்டாவது கட்டத்திலாவது, ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ரூபாயையும் சரியான முறையில் செலவு செய்வதின் மூலமும், திருத்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் தூய்மை இந்தியா என்ற உயரிய இலட்சியத்தை உணரவேண்டும். சத்தியாகிரகம் போன்ற இயக்கம் தொடங்கப்பட்டு, சுகாதாரமற்ற சூழ்நிலை, மாசு மற்றும் குப்பைகள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழித்தல், திறந்த வடிகால் மற்றும் திறந்த குப்பை அமைப்பு ஆகியவற்றின் துயரத்திலிருந்து தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உறுதியான அற்பணிப்புடன், மோடி அரசு அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா இயக்கத்தினை தொடங்கியது. நாட்டிலுள்ள அனைத்துக் குடியிருப்புகளும் தூய்மை மற்றும் பசுமைச் சூழல் வளத்துடன் நிறைந்து இருக்கவேண்டும் என்ற தீர்வுடன் தூய்மை இந்தியா கோஷம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் எதிரொலித்தது.
பாபுஜியின் 150வது பிறந்த தினமான அக்டோபர் 2, 2019 அன்று நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர கழிவறை, கழிவு சுத்திகரிப்பு அமைப்புகள், தரமான குடிநீர் மற்றும் தூய்மையான சாலைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் உயரிய தன்மையுடையதாயிருக்கிறது. இந்த உயரிய இலக்கினை அடைவதற்காக, ஒன்பது கோடியே 20 லட்சம் கழிப்பறைகளைக் கட்டி, திறந்த வெளியில் மலம் கழிப்பதிலிருந்து நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஐந்தரை லட்சம் கிராமங்களை விடுவித்துள்ளது என்று மத்திய அரசு பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. எனினும், தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO), நாட்டின் ஜனத்தொகையில் 95 சதவிகித மக்களுக்கு கழிப்பறைகள் உள்ளன என்ற அரசாங்கத்தின் கூற்றினை ஒப்புக்கொள்ளவில்லை. அது கிராமப்புற பகுதிகளில் 71 சதவிகிதம் மட்டுமே என்று உறுதி செய்துள்ளது. ஒடிசா மற்றும் உ.பி.இல் உள்ள பாதி கிராமப்புற மக்களுக்கு கழிப்பறை ஒரு பகற்கனவாகவே இருக்கிறது என்று தேசிய மாதிரி சுற்றுப்பார்வை புள்ளிவிவர மையம் கூறுகிறது.
இந்தியாவில், சுகாதாரமின்மையே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதற்கும், பலரது மனம், மற்றும் உடல் வளர்ச்சி குன்றியதற்கும் முக்கிய காரணமாகும். கடந்த காலத்தை ஒப்பிடும்போது, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தனி நபர் மற்றும் சமுதாயக் கழிப்பறைகளைக் கட்டுதல் சூடு பிடித்திருக்கிறது என்பது நிதர்சனமேயாகும். எனினும், இந்த அடிப்படை வசதி இன்னும் பலகோடி இந்தியர்களுக்கு எட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். விரும்பிய மாற்றத்தினை விஞ்ஞான அணுகுமுறையாலும், இடையறா முயற்சியாலும், தூய்மை இந்தியா என்னும் உத்வேகத்தாலும் அடையமுடியும். ஐந்து ஆண்டுகளுக்கும் முன்பே, தூய்மை இந்தியா இயக்கம் மிகுந்த உற்சாகத்துடனும், பரபரப்புடனும் தொடங்கப்பட்டாலும், பதிவேட்டின்படி, இது 39 சதவிகிதத்திற்கும் கீழான கிராமப்புற மக்களை மட்டுமே எட்டியது.
அரசின் புள்ளவிவரக் கணக்கின்படி கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கழிவறைகளுக்கும், நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கழிவறைகளுக்கும் தொடர்பே இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டு மாநிலங்களில் "வாட்டர்எய்டு" என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கரிசனைக்குரிய பல உண்மைகள் தெரியவந்துள்ளன. முடிக்கப்பட்டுவிட்டதாக திட்மிடப்பட்டுள்ள கழிவறைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் தரத்தைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், மீதமுள்ள 35 சதவிகிதக் கழிவறைகள் பழுதுபார்க்கப்பட வேண்டியதாயும், பயன்றதாயும் இருக்கிறது என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ரைஸ் – RICE (கருணை பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம்) நடத்திய ஆய்வின்படி, நான்கு பெரிய மாநிலங்களிலுள்ள கிராமப்புற மக்களில் 44 சதவிகிதத்தினர் திறந்த மலம் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லாதிருக்கிறார்கள். நீர் மற்றும் வடிகால் மேலாண்மை அமைப்பின் குறைபாடுகள் காரணமாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோடிக்கணக்கான கழிப்பறைகள் பயனற்றதாக இருக்கும் நிலையானது, வரி செலுத்தவோரின் பணத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வீணாக்குவதற்கு ஒத்திருக்கிறது. திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பது குறித்த விழிப்புணர்வைப் போலவே தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் உருவாக்குவது முக்கியமாகும். மக்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் கைக்கொண்டு வரும் பழைய பழக்கங்களை நிறுத்த ஊக்குவிப்பதும் மற்றும் மனித கழிவுகளைத் திறம்பட அகற்றுவதற்கான அமைப்பைத் தரப்படுத்துவதும் அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள முக்கியமான சவால்கள் ஆகும். விஞ்ஞானமற்ற முறையில் லட்சக்கணக்கான கழிப்பறைகளை கட்டுதல், மேலும் சுற்றுச்சூழல், நட்பு மற்றும் பொருளாதார உயிர் கழிப்பறைகளுக்கு ஆதரவான பரித்துரைகளைப் புறக்கணித்தல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது. குடிமக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழலின் தூய்மையை மேம்படுத்துவதற்கு அரசாங்க உத்திகள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய தீவிரமான மாற்றத்தால்தான் தூய்மை இந்தியாவை வெளிக்கொணர முடியும்.